சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில், பட்டதாரி இளைஞர்கள் மின்துறை தலைமை கண்காணிப்பு அதிகாரியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம்..
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,ஸ்மார்ட் மீட்டரை போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறையில் காலியாக உள்ள 750 க்கும் மேற்பட்ட பணியிடங்களை பட்டதாரி இளைஞர்களை கொண்டு நிரப்ப வலியுறுத்தியும் சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில், பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோ ர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த தலைமை கண்காணிப்பாளர் சண்முகத்தை முற்றுகையிட்டு நேரு எம்எல்ஏ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ நேரு, புதுச்சேரி மின்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமலும், காலியாக உள்ள இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்காமலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்றார். மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டும் புதுச்சேரி அரசு, மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments