பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாணவர்கள் கடும் அவதி.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 7நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கி விடிய விடிய விட்டு விட்டு மிதமான மழை நீடித்து வருகிறது.
காலை மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் விடுமுறை அறிவிக்காமல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரி வழக்கம் போல செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். பொன்னேரியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக, சேறும், சகதி நிறைந்து காணப்படுவதால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் தத்தளித்து சென்று வருகின்றனர்.
சிலர் மழையில் நனைந்தபடியும், ஒரு சிலர் இருசக்கர வாகனங்களிலும், குடைபிடித்தபடியும், சேறும், சகதியிலும் சிரமத்துடன் குழந்தைகளை பள்ளிகளுக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
No comments