தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் இருந்து முகத்துவாரம் வரை இருபக்க கரை இல்லாததால் உட்புகுந்த கடல் நீர்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் மாவட்டத்தின் பிரதான வடிகால் ஆறுகளில் ஒன்றான உப்பனாறு வழியே சென்று தரங்கம்பாடி அருகே கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி உப்பனாற்றின் வழியே கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து தடுப்பணை கட்டப்பட்டது. ஆற்றின் வலது புறம் தடுப்பணை அமைக்கப்பட்ட நிலையில் இடது புறம் கரைகள் கூட சீரமைக்கப்படவில்லை. இதனால் உப்பனாற்று பாலத்தில் இருந்து கடலில் கலக்கும் முகத்துவாரம் வரை இருபுற கரைகள் இல்லாமல் மழை நீரும் கடல் சீற்றம் காரணமாக கடல் நீரும் உட்புகுந்து தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை கடல் போல் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக வி.ஜி.டி நகர், விநாயகர் பாளையம், ஆரன் பாளையம், அந்தோணியார் கோவில் தெரு மிஷன் தெரு, ராஜூவ்புரம் முதல் நண்டலறு வரையிலான இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இரு புறமும் கடல் நீர் முழுவதுமாக சூழ்ந்து விளைநிலங்களும் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பணை அமைக்கும் போது ஆற்றின் இடதுபக்க இரு கரையை சீரமைத்து முகத்துவாரம் தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை அதற்கான எந்த பணிகளும் மேற்கொள்ளாததால் தற்பொழுது கடல் நீர் முழுவதுமாக நகர் பகுதியில் சூழ்ந்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைந்து தரங்கம்பாடி உப்பனாற்றின் முகத்துவாரத்தை சீரமைத்து இடது பக்கத்தின் இரு கறைகளையும் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments