பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் தீர்வு காணப்பட்ட 21 மனுக்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி பயனாளிகளிடம் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 51 பேர் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர். அதில் 30 மனுக்கள் களஆய்வில் உள்ளன. மீதமுள்ள 21 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதன்கிழமைதோறும் வாரம் ஒரு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. வரும் வாரங்களில் தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் பாலமுருகன், வருவாய் அலுவலர் அந்தோணிராஜ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments