Breaking News

தேரழுந்தூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்மூர்த்தி விநாயகர் (பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்) கோவிலில் மகாகும்பாபிஷேகம்;



மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூரில் 150 ஆண்டுகள் மேலாக பழைமை வாய்ந்த மும்மூர்த்தி விநாயகர்  கோவில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த  மும்மூர்த்தி விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 
இந்த விநாயகரை வழிபடுபவர்களுக்கு  மன அமைதியும், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் அகலும், உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்பதும், திருமண தடை நீங்கும்,  குழந்தைப்பேறு கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகமானது இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 
இதனை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், கணபதி ஹோமம் தொடங்கி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து, யாக குண்டங்கள் அமைத்து கடந்த 18 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாக கால பூஜை நடைபெற்று பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிநீர் அடங்கிய கடங்களை மேள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரானது கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் மும்மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!