ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கண்டித்து தூத்துக்குடியில் விஸ்வகர்மா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், விஸ்வகர்மா என்று ஒரு சாதி இல்லை, பாரம்பரிய தொழிலும் அல்ல என்றும் பல்வேறு வகையான தொழில்செய்பவர்களையும் விஸ்வகர்மா சமுதாயத்துடன் இணைத்து கூறிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை கண்டித்தும், அவரது பேச்சை திரும்ப பெற வலியுறுத்தியும், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்மா சமுதாய மகாஜன பேரவை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். விஸ்வகர்மா நகைத் தொழிலாளர்கள் சங்கம் முன்னாள் தலைவர் பெருமாள், விஸ்வகர்மா கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு, விஸ்வகர்மா மகாஜன பேரவை முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விஸ்வகர்மா பேரியக்கம் பொதுச் செயலாளர் மூர்த்தி, மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி முத்துசாமி ஆச்சாரி இளைஞர் பேரவை தலைவர் ராஜா, விஸ்வகர்மா சமுதாய ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், தமிழகமயன் மக்கள் கட்சி செல்வசங்கர் மற்றும் தாளமுத்துநகர் வீரசெல்வம் (எ) ரீகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments