தூத்துக்குடி வருகைதரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு.
இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) மாலை தூத்துக்குடி வருகை தருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வரும் அவர் அங்கிருந்து சாலை வழியாக தூத்துக்குடி வருகிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக தூத்துக்குடிக்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் வைத்து மாலை 6 மணியளவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி சத்யா ரிசாட்டில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக சார்பு அணி நிர்வாகிகளை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அதனைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெறும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
பின்னர் பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாலை 5 மணியளவில் திமுக பவள விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சாலை வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இருநாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக செயல்வீரர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments