கடிதம் எழுதுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்..
கடிதம் எழுதுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் அஞ்சல் துறை குழுவினருக்கு புதுச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது..
இந்திய அளவில் கடிதம் எழுதுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக "தாய் அக்கர்"என்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பேரணி இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் உள்ள இந்திய அஞ்சல் துறை இயக்குனர் திஷா தலைமையில்,16 பேர் கொண்ட பெண்கள் குழுவினர் நாடு முழுவதும் பைக்குகளில் பேரணி செல்கின்றனர்.
கடந்த 9-ஆம் தேதி பெங்களூருவில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர்கள், பல்வேறு நகரங்களை கடந்து இன்று புதுச்சேரி வந்தனர். கடிதம் எழுதுதல் சம்பந்தமாக அஞ்சல் துறை ஊழியர்களுடன் கலந்து உரையாடிய பின், புதுச்சேரி கடற்கரை காந்தி திடலுக்கு வந்த குழு டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதுதலின் அவசியம் குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடியது. மேலும், தபால் அட்டையை கொடுத்து மாணவர்களை எழுத வைத்து ஊக்கப்படுத்தினர்.
இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஞ்சல் துறையினர் செய்தனர்.
No comments