Breaking News

இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன்:- மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தபின் எம்.பி. சுதா பேட்டி:-

 


மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் விரிவாக்கப்பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக ரயில் பயணிகளிடையே குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்பணிகளை மயிலாடுதுறை எம்.பி. சுதா இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, நடைமேடையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் உடைந்து தரமற்ற முறையில் இருந்ததைக் கண்டு அவர் ஒப்பந்ததாரரிடம் பணிகளை சரியாக செய்யுங்கள், மீண்டும் மீண்டும் உடைப்பதற்காகவா டைல்ஸ் போடுகிறீர்கள் இந்த பணிக்காக மீண்டும் நிதி ஒதுக்க முடியுமா என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து சமையல் கூடம், தங்கும் அறை கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின்னர், பேட்டரி கார் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்று ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பிய போது, ஓட்டுநரிடம் இருந்து சிகரெட் வாடை வந்ததால், பேட்டரி கார் ஓட்டும்போது சிகரெட் பிடிக்காதீர்கள், சிகரெட் நாற்றம் அதிகமாக உள்ளது என்று அறிவுறுத்தினார். 

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை எம்பி சுதா கூறும் போது: மயிலாடுதுறை வழியாக 88 ரயில்களுக்குமேல் சென்னை செல்லும் நிலையில் ஒரு சில ரயில்கள் மட்டுமே மயிலாடுதுறையில் நின்று செல்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். சென்னையில் இருந்து மயிலாடுதுறை வரும் பயணிகள், மீண்டும் உடனடியாக சென்னைக்கு திரும்பிச் செல்லும் வகையில் இன்டர்சிட்டி ரயில் சேவை ஏற்படுத்தித் தர ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

இன்டர்சிட்டி ரயிலை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை பகுதியில் இரட்டைவழி பாதை இல்லாதது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவில்லை. ரயில்களில் பயணிக்கும் நான் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பலமுறை புகார் தெரிவித்துள்ளேன். இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளேன். மயிலாடுதுறை-தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நான் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் பேசியபோது என்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும் தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் துவங்குவது குறித்து ஒரு குழு அமைத்து அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் தெரிவித்தார். ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தங்கும் விடுதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். இடம் உள்ளது. ஆனால் விடுதி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆய்வின்போது, நகராட்சி தலைவர் செல்வராஜ், ரயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!