பல ஆண்டுகளாக செயல்படாத ஹை மாஸ் விளக்குக்கு மலர்வளையம் வைத்து அதிமுகவினர் நூதன போராட்டம்..
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தட்டாஞ்சாவடி,ஏனாம் என இரண்டு தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிட்டார். ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்த ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர் இதுவரை அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்றும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும், வாய்க்கால்களை தூர்வார வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், மின் அழுத்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தொகுதி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் அன்பழகன் அனுமதியுடன், தொகுதி செயலாளர் கமல் தாஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தாகூர் நகர் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சருமான ரங்கசாமியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள ஹைமாஸ் விளக்குக்கு மலர்வளையம் வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாநில துணை செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ராஜேந்திரன் உட்பட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments