Breaking News

தூத்துக்குடியில் 5ஆவது புத்தகத் திருவிழா, நெய்தல் கலை விழா தொடங்கியது; அக்.13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5வது புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா எட்டையபுரம் சாலையில் உள்ள சங்கரபேரி திடலில் நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழா அக்டோபர்  13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் அக்டோபர் 11 முதல் 13ஆம் தேதி வரை நெய்தல் கலைத் திருவிழா நடைபெறுகிறது. 

இதில், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பிரபலங்கள் பங்கேற்கும் கவியரங்கம், பேச்சரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றவுள்ளது. இந்த புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா துவக்க விழா எட்டையபுரம் சாலையில் உள்ள சங்கரபேரி திடலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, கனிமொழி கருணாநிதி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டனர். 

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்து பேசினார். கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், புத்தக்கத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். 

சுமார் 66 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகின்றன. புதிய படைப்பாளிகளை கொண்டாடும் வகையில் இந்த புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவுடன் அமைந்தில்லாமல் இயற்கையோடு அமைந்திருக்கிறது. ஐரோப்பாவில் அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழில்தான் வெளியிடப்பட்டது. 1554ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாடு லெஸ்பென்ட் நகரம் காற்றில்லா எனும் நூல் தமிழில் வெளியிட்டது. 

அந்த நூல் வெளிவருவதற்கு காரணம் வின்சென்ட், ஜோர்க்கே கார்வெல்லோ, குரூஸ் ஆகிய மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். புன்னக்காயலில்தான் முதல் அச்சுக்கூடம் 1586 ஹென்றிக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. அடியார் வரலாறு என்ற புத்தகம் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட இடம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த புன்னக்காயல் கிராமம். வரலாற்றிலேயே புத்தகங்களுக்கான முதன்மை இடமாக தூத்துக்குடி மாவட்டம் விளங்குகிறது.

தொல்லியல் சிறப்புகளாக இருந்தாலும், இலக்கிய சிறப்புகளாக இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டமானது முதன்மை பெற்று விளங்குகிறது. இசை வானகர்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கின்றனர். இங்கு காணப்படும் ஒவ்வொரு காட்சிகளும் இயற்கை காட்சிகளாகும், மண்ணின் புவியியல் வளம், இயற்கை வளம், புள்ளினங்கள், விலங்கினங்கள், ஊர்வன அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாக மிகச் சிறப்பாக இந்த புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா, பபாசி செயலாளர் முருகன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் நன்றி கூறினார். 

No comments

Copying is disabled on this page!