இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 3.70 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வீடுகள்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி, சிலுவைப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு அரசு சார்பில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக 56 வீடுகள் கட்டப்பட்டது. இந்நிலையில், கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகளின் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி புதிய குடியிருப்புகளை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். தொடர்ந்து திருவிளக்கேற்றி கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். அதனைத்தொர்ந்து புதிய வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார்கள் சிவக்குமார், முரளிதரன், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, ஊராட்சிமன்ற உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments