பகலில் கார் டிரைவர்; இரவில் பூட்டிய வீடுகளில் கொள்ளை தூத்துக்குடியில் பலே கொள்ளையன் கைது.
தூத்துக்குடி மாநகரில் சமீபகாலமாக பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளை நடப்பது தொடர் கதையாக இருந்து வந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், டவுண் ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் கண்காணிப்பில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அந்த வகையில், இரவு நேர திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை போலீசார் கண்காணித்தும், தேடியும் வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை மில்லர்புரத்தில் நாராயணன் என்பவரது வீட்டில் இருந்து சிசிடிவி, பென் டிரைவ் போன்றவற்றை திருடிக்கொண்டு சென்றபோது தனிப்படை போலீசாரிடம் வாலிபர் ஓருவர் சிக்கினார்.
இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட அந்த இளைஞர் தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தைச் சேர்ந்த மொய்தீன் என்பதும், அவர் தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் டிரைவராக வேலை பார்ப்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, பிடிபட்ட மொய்தீன் பகலில் டிரைவராக வேலைக்கு செல்லும் பொழுது மாநகரில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவாராம். பின்னர் இரவில் அந்த வீடுகளுக்கு சென்று கொள்ளை அடிப்பதை வழக்கமாக செய்துள்ளார்.
மேலும், கடந்த மாதம் 21ம் தேதி இரவு டூவிபுரம் 5வது தெருவில் இரண்டு வீடுகளில் தங்க நகைகளையும், வெள்ளிப்பொருட்களையும், ஜூலை மாதம் 24ம் தேதி மில்லர்புரம் பள்ளிவாசல் தெருவில் ஒரு வீட்டில் தங்க நகைகளையும், ஏப்ரல் மாதம் 9ம் தேதி சிதம்பரநகர் 3வது தெருவில் உள்ள வீட்டில் ரூபாய் 1 லட்சத்தையும் திருடியதாக மொய்தீன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து மொய்தீனிடமிருந்து, சுமார் 96 கிராம் தங்க பொருட்களையும், 465 கிராம் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது கோவில்பட்டி, சேலம், வேலூர், திருவள்ளூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments