Breaking News

தூத்துக்குடியில் 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம்; தேசியகொடியேற்றி கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்!


தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியேற்றி கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர பிரமாண்ட கொடிகம்பம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு திமுக தலைவருமான கனிமொழி எம்.பி., பங்கேற்று 100 அடி உயர கொடிக்கம்பத்தில் அகலம், உயரம் கொண்ட தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும், புனரமைக்கப்பட்ட மாநகராட்சியின் மத்திய அலுவலகத்தினை கனிமொழி எம்.பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைவெள்ள பாதிப்பின்போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்கு கனிமொழி எம்.பி. பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக, தூத்துக்குடி நடைபெறவிருக்கும் 5வது புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழாவையொட்டி நடமாடும் விழிப்புணர்வு வாகன நூலகத்தைக் கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும், புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா குறித்து பேருந்துகளில் ஒட்டப்பட்ட விளம்பர ஸ்டிக்கரை பார்வையிட்டு, துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு அளித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசுகையில்:

நமது தேசியக் கொடியைப் போற்றக்கூடிய வகையில் 100 அடி உயரத்தில் மிகப்பெரிய கொடி கம்பத்தில், தேசியக்கொடியை ஏற்றக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தங்களுடைய அடிப்படை வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கே போராடிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்திலும் மக்களுக்கான தங்களை அர்ப்பணித்து கடமையாற்றிய தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்குப் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

மக்கள் சேவை மற்றும் அகிம்சை இந்த இரண்டும்தான் மகாத்மா காந்தி மக்களுக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய செய்தி. மக்களுக்காக பணியாற்ற வேண்டும், மக்களோடு வாழ வேண்டும், மக்களோடு பயணிக்க வேண்டும் அதே நேரத்தில் அகிம்சை என்பது இந்த உலகத்திற்குக் கொடையாகத் தந்திருக்கக் கூடிய மிகப் பெரிய ஆயுதம். அகிம்சை முறையில் போராடுவது என்பது இன்று உலகம் முழுவதும் பரவி கிடைக்கக்கூடிய, எத்தனையோ மக்களுடைய விடுதலைக்கு வித்தாக அமைந்து இருக்கக்கூடிய கூடிய ஒரு போராட்டமுறை. அதேபோல, மக்களோடு சென்று அவர்களுடன் ஒருவராக நின்று பணியாற்றக்கூடிய பணி என்பது மகாத்மா காந்தி வழியிலே வந்த ஒன்று. அந்த வழியில்தான், இங்கே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள், மழைக்காலத்தில் அடிப்படை வசதிகளை, சுற்றுப்புறச் சூழலை, சுகாதாரத்தைக் பேணி பாதுகாத்தார்கள். எந்த நோயும் பரவாமல் மக்களின் உயிரைப் பாதுகாத்தவர்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!