Breaking News

ஈரோட்டில் கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனம் தீயில் எறிந்து சேதம்.


ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில்  மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது. இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைய உள்ளதையொட்டி, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் கடந்த 6ம் தேதி ராமேஸ்வரம் கடலில் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வருவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். 

ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தலில் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோயில் வளாக பந்தலுக்குள் தீ பிடித்து கரும்புகை வந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, தகர பந்தலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதன்பேரில், விரைந்து வந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகின. தீ விபத்து நடந்த இடத்தில் மின்சாதன பொருட்களோ, எலக்ட்ரிக் வாகனங்களோ எதுவும் இல்லை. இதனால், மர்மநபர்கள் யாரேனும் நள்ளிரவில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றனரா? என்ற கோணத்தில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வும் நடத்தி வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!