மயிலாடுதுறையில் 120 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள் இலவசமாக கற்றுத்தர தயார்!
மயிலாடுதுறையில் 120 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது மாணவர்கள் முன்வந்தால் இலவசமாக கற்றுத்தர தயார் எனவும் கூறுகின்றனர்.
நவராத்திரி விழா இந்துக்களின் வீடுகளில் பொம்மைகள் கொண்டு அலங்கரித்து உற்றார் உறவினர்களை வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் வீடுகள் தோறும் ஆண்டுக்கு, ஆண்டு புதுமையான முறையில் கொலு பொம்மைகளை வைத்து, கண்காட்சி போல் நடத்துவதில் பெருமைக்குரிய காரியமாக மக்கள் கருதுகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 120 ஆண்டுகளாக கொலு பொம்மைகள் பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை உற்பத்தியாளர்கள், சிந்தனையை தூண்டும் விதமாக ஆண்டுதோறும் புதுப்புது டிசைன்களில் கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பாரம்பரிய கிராமங்கள், சந்தைகள், வீடுகளில் விறகு அடுப்பு, மண்பானையில் சமையல் செய்வது, , விவசாயிகள், பண்டைய கிராம விளையாட்டுக்களை ஆடுவது, கிரிக்கெட் ஆடும் பொம்மைகள் திருமணக் காட்சி, மூன்றடி உயரம் உள்ள தலையாட்டி பொம்மை, பெண்களுக்கு சடங்கு செய்யும் நிகழ்ச்சிகள், கிருஷ்ணாவதாரம் தசாவதாரம் பொம்மைகள், கல்கத்தா காளி, சரஸ்வதி பூஜை போன்ற பொம்மைகள், சீன வாஸ்து முகமூடி பொம்மைகள், எகிப்து மம்மி பொம்மைகள், குழந்தைகளை கவரும் சோட்டா பீம் பொம்மைகள் , நவ கன்னிகளின் பொம்மைகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட டிசைன்களில் கொலு பொம்மைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. களிமண்ணை வெட்டி எடுத்து அவற்றை வண்டல் மண்ணுடன் சேர்த்து தயார் செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் கொலு பொம்மைகள் செய்யும் பணி மார்ச் மாதம் முதல் துவங்குகின்றன. பொம்மைகளின் வடிவமைப்பு செய்தல் அவற்றை சூலைகளில் வைத்து சுடுதல், காய வைத்தல் வர்ணம் தீட்டுதல் என்று பல கட்டங்களாக பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன.
அழகிய வடிவங்களில் கொலுபொம்மைகள் தயார் செய்யப்பட்ட பின்பு விற்பனைக்கு வருகின்றன. இவற்றை வாங்குவதற்கு உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கு இவற்றை பரிசுப்பொருளாக வாங்கி அனுப்பிவைக்கின்றனர். மேலும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைப்பவர்கள், ஏதாவது ஒரு பொருளில் தலைப்பில் பொம்மைகள் வைக்க வேண்டும் என்றாலும் முன்கூட்டியே சொன்னால் அதற்கு ஏற்பவும் பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. பொம்மைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது அது மட்டுமின்றி அமெரிக்கா லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வத்துடன் ஆர்டர் செய்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொம்மைகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் இவற்றை விற்பனை செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் ஐந்து தலைமுறைகளாக தாங்கள் பொம்மைகளை செய்து வருவதாகவும் தற்போது நான்கு பேர் மட்டுமே இந்த பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத இந்த பொம்மைகளை செய்வதற்கு மாணவர்கள் முன் வந்தால் கட்டணமின்றி கற்றுத்தர தயாராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
No comments