வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா. ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை பயணம்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்.8-ஆம் தேதி நிறைவடைகிறது.
தஞ்சை மறைமாவட்ட ஆயராக அண்மையில் பொறுப்பேற்ற டி.சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியுடன் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ் பவனி செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவை ஒட்டி சென்னை, விழுப்புரம், கடலூர் திண்டிவனம் விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காரைக்கால் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்கள் டெம்போகளில் மாதா உருவத்துடன் மாதா பாடல் ஒலிக்க கைதட்டி ஆரவாரம் செய்தவாறு காரைக்கால் பாரதியார் சாலையின் ஓரங்களில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சாரை சாரையாக செல்கின்றனர்.
No comments