சீர்காழி அருகே சாலை விரிவாக்க பணிக்காக வேரோடு வெட்டி அகற்றப்படும் நூற்றாண்டு கடந்த புளிய மரங்கள்.
சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வேரோடு வெட்டி அகற்றப்படும் நூற்றாண்டு கடந்த புளிய மரங்கள். காலம் காலமாக வாழ்ந்த மரங்கள் வெட்டப்பட்டதால் வாழ்விடம் இழந்து தவிக்கும் குரங்குகள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பிரிவு சாலைகள் அமைந்துள்ளது. இச்சாலையின் இருபுறமும் நூற்றாண்டுகளைக் கடந்த புளிய மரங்கள் அடந்திருந்தன. இந்த மரங்களில் காலம் காலமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன.
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சூரக்காட்டில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இருந்த புளிய மரங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டி அகற்றப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மரங்களில் வசித்த குரங்குகள் பூம்புகார் சாலையில் உள்ள புளிய மரங்களில் தஞ்சம் அடைந்து வசித்து வந்தது.
இந்நிலையில் தற்போது பூம்புகார் சாலையையும் அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில தினங்களாக தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.இதனால் காலம் காலமாக தங்கள் வசித்து வந்த வாழ்விடங்களை இழந்த குரங்குகள் சாலையோரம் தவித்து வருகிறது.
மேலும் அப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள குடியிருப்புகளிலும் சில குரங்குகள் தஞ்சம் அடைந்துள்ளன.குரங்குகளால் மனிதர்களுக்கும் அதே போல் மனிதர்களால் குரங்குகளும் இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே வாழ்விடம் இழந்து தவிக்கும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து வனத்துறைக்கு சொந்தமாக காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments