புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சந்திப்பு வேலைவாய்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்து மனு !
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, எல். சம்பத் ஆகியோர் துணைநிலை ஆளுநரின் ராஜ்நிவாசில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: –
புதுச்சேரி மாநிலத்தில் 2007–ஆம் ஆண்டு போட்டித்தேர்வு மூலம் தேர்வு பெற்று பணியில் சேர்ந்து இதுநாள் வரை பணியாற்றி வரும் ஊர்க்காவல் படை வீரர்கள் தங்களுக்கு குரூப்–சி அல்லது குரூப்–டி பிரிவில் அரசு பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இராணுவ மற்றும் ஊர்க்காவல்படைப் பிரிவினருக்கு மேற்கண்ட அரசு பணி வழங்க வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அரசாணையை மேற்கோள்காட்டி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த காலங்களில் காவலர், தீயைணைப்பு வீரர், ஜெயில் வார்டன், கிராம உதவியாளர் போன்ற பணிகள் வழங்கப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் தற்பொழுது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் (DR&DM) மொத்தமுள்ள 119 கிராம உதவியாளர் (VILLAGE ASSISTANT) பணியிடங்களில் அரசு விதிகளின்படி 30 சதவீதத்தின்படி 36 பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் புதுச்சேரி ஊர்க்காவல்படை வீரர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். அவ்வாறு கடந்த மார்ச் மாதம் 12 பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு விருப்ப மனுக்கல் பெறப்பட்டு அதற்கான கோப்பு மேதகு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிகிறது.
தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு என்று எவ்வித பணிப்பலனோ, விடுமுறையோ, அரசு சலுகைகளோ கிடைப்பதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். இப்படி அரசின் எந்த சலுகையும் பெற முடியாமல் ஏன் வங்கிக்கடன் கூட பெற முடியாமல் அவதியுறும் மேற்கண்ட படை வீரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், அரசு விதிப்படி போதிய உடல் தகுதி மற்றும் 12–ஆம் வகுப்பு தேர்ச்சியும் இல்லாததாலும் காவலர், தீயைணைப்பு, ஜெயில் வார்டன் போன்ற பணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆகவே, ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கிராம உதவியாளர் பணிவாய்ப்பு மட்டுமே. அதுவும் தற்பொழுது பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்கும் விதத்தில் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் கருணை உள்ளத்தோடு அந்த கோப்புக்கு அனுமதியளித்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.
உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோருதல்: –
புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறையில் கடந்த 2011–ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட 196 தினக்கூலி ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் அவர்களை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார்.
அதனடிப்படையில் புதுச்சேரி அரசு மேற்கண்ட 196 தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கோப்புக்கு மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளதாக அறிகிறோம். அதற்காக மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களுக்கும், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் மேதகு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இன்னும் அவர்களுக்கு பணி ஆணை வழங்காமல் இருப்பதை தங்கள் கவனத்திற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். ஆகவே, அவர்களுக்கு விரைந்து நிரந்தர பணி ஆணை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோருதல்: –
புதுச்சேரி மாநிலத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்து வழங்கி இருந்தாலும் கூட, புயல், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிவாரணத்தை புதுச்சேரி அரசு வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் அந்த மக்களுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை துறையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் வழங்க கோருதல்: –
புதுச்சேரி அரசின் கால்நடை துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 83 பேர் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு ரூ. 161–ம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 333–ம் ஊதியமாக பெற்று வருகின்றனர். இதுகுறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தினக்கூலியாக பணியாற்றுபவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்று மேற்கண்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே, மாண்புமிகு முதல்வர் அறிவித்தபடி கால்நடை துறையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ரூ. 18 ஆயிரம் மாத சம்பளமாக வழங்க மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments