Breaking News

புதியம்புத்தூரில் ஜவுளி விற்பனை வளாகம்: தமிழ்நாடு துணிநூல் இயக்குநர் லலிதா ஆய்வு.


புதியம்புத்தூரில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணிநூல் இயக்குநர் லலிதா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் துணிநூல் துறைசார்பில், புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலை வகித்தார். துணிநூல் இயக்குநர் லலிதா தலைமை வகித்து பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடித்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 

நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிகமுக்கியமானதாகும். தமிழ்நாடு அரசு ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது என்றார். 

தொடர்ந்து அரசு நிலங்கள் தவிர்த்து, தனியாரிடமிருந்தும் நிலத்தினை கொள்முதல் செய்து ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் குறித்து சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஜவுளி விற்பனை வளாகக்கட்டிடம் அமைக்க வாய்ப்புள்ளதா என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. 

பின்னர், புதியம்புத்தூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கங்கள் உற்பத்தி செய்துவரும் ஆயத்த ஆடைகளை துணிநூல் இயக்குநர் லலிதா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காலியிடம் மற்றும் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை பார்வையிட்டனர்.  

கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ரமேஷ், மதுரை மண்டல துணிநூல்துறை துணை இயக்குநர் திருவாசகர், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ஸ்வர்ணலதா, மகளிர்திட்ட இயக்குநர் மல்லிகா, புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி மற்றும் அரசு அலுவலர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்பட கலந்துகொண்டனர். 

No comments

Copying is disabled on this page!