Breaking News

மாநகரில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு லைசென்ஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி மாநகர் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து அடைப்பதற்காக மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் கொட்டகை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும், மாநகரில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு விரைவில் லைசென்ஸ் வழங்கப்படும் என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பாளை ரோடு, பக்கிள் ஓடை பண்டுகரை சாலை, மடத்தூர் சாலை ஆகிய இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை வீட்டில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும் எனவும், அதனை மீறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மாநகரில் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து, அடைப்பதற்காக கணேஷ்நகர் சந்திப்பில் கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு இந்த கொட்டகையில் அடைக்கப்படும். 

மேலும், ஒருநாள் மட்டும் இங்கு வைத்து பாதுகாக்கப்படும். அதற்குள் அவற்றின் உரிமையாளர்கள் வந்து உரிய அபராத தொகையை செலுத்தி அழைத்துச் செல்லலாம். அப்படி அவர்கள் கால்நடைகளை அழைத்து செல்லவில்லையென்றால், அந்த கால்நடைகள் சங்கரன்கோவிலிலுள்ள கால்நடை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், தூத்துக்குடி மாநகரில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு லைசென்ஸ் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார். 

No comments

Copying is disabled on this page!