புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : உலக அமைதிக்காக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு.
மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவிப்பங்குதந்தை ஜோ கிளமெண்ட் பவனியை வழிநடத்தினார். தஞ்சாவூர் ஏழுப்பட்டி ஜெபத்தோட்ட அதிபர் பேரருட்திரு.மிக்கேல் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “ஆடம்பரம் துறந்து ஆண்டவரின் அழைப்பை ஏற்றவர்” என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியை அமல அன்னை அன்பியக் குழுவினர், புனித சேவியர் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியினர் பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.
இத்திருப்பலியில், உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற்குழுவினர், பலிபீட சிறுவர்கள் மற்றும் இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் மற்றும் பங்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
No comments