2007ஆம் ஆண்டு தூண்டில் முள் அமைக்க மத்திய அரசு வழங்கிய சுமார் 8 கோடி ரூபாய் நிதி எங்கே..?
சோலை நகர் வடக்கு பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,கடந்த 2007ஆம் ஆண்டு தூண்டில் முள் அமைக்க மத்திய அரசு வழங்கிய சுமார் 8 கோடி ரூபாய் நிதி எங்கே போனது என கேள்வி எழுப்பிய மீனவர்கள்,உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் வடக்கு பகுதியில் சுமார் 500கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதால் தூண்டில் முள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில்,கடந்த 2007ஆம் மத்திய அரசின் நிதி மூலம் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் தூண்டில் முள் வளைவு அமைக்க அப்போதைய முதல்வர் ரங்கசாமி தலைமையில் பூமி பூஜை நடைப்பெற்றது.அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த நிலையில், தூண்டில் முள் வளைவு அமைக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்பிறகு அப்பகுதி மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், புதுவை அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை காரணம் காட்டி அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்த வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனை அடுத்து சோலை நகர் வடக்கு பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரையில் இருந்து 100 மீட்டர் அளவு தள்ளி நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் இது பாதுகாப்பானது இல்லை என்றும், படகுகளை நிறுத்த இடம் இல்லாததால் வேறு வழி இல்லாமல் நிறுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அப்பகுதி மீனவ பஞ்சாயத்து தலைவர் பச்சையப்பன்,
கடந்த 20 வருடங்களாக தூண்டில் முள் வளைவு அமைக்க போராடி வருகிறோம் என்றும், இதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் இது எங்கே போனது என தெரியவில்லை என வேதனையாக தெரிவித்தார். தூண்டில் வளைவு இல்லாததால், கடல் அரிப்பு ஏற்பட்டு அச்சமுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், கடல் அரிப்பை தடுப்பதற்காக போடப்பட்ட தடுப்பு சுவரும் சிதலமடைந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆண்டுக்கு சுமார் 330 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தரும் மீனவ சமுதாய மக்களை,புதுச்சேரி அரசு அலட்சியப்படுத்துவதுடன்,ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய அவர், உடனடியாக தூண்டி முள் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments