மோட்டார் பயன்படுத்தி சங்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!
தூத்துக்குடியில் மோட்டார் பயன்படுத்தி சங்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் சங்குகுளி தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும் அவர்கள் மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து 350க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், தற்போது ஆழ் கடலில் மூழ்கி சங்கு எடுப்பதற்காக மோட்டார் பம்புகள் பயன்படுத்தி சங்கு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்குகுளி தொழிலாளர்கள் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சங்குகுளிப்பதற்கு தடைவிதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனைக் கண்டித்தும், இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் சங்குகுளி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சங்குகுளி தொழிலாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து மோட்டார் பம்புகளை பயன்படுத்தி சங்குகுளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும், மத்திய கடல்சார் ஆராய்ச்சி மைய ஆய்வுக்குப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனயைடுத்து அனைத்து சங்குளிகுளி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா சப்னத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதில், முத்துமாநகர் சங்கு வியாபாரிகள் சங்க தலைவர் மீராசா, செயலாளர் நடராஜன், பொருளாளர் ரொபின்ஸ்டன், தொழிலாளர் நலன் காக்கும் சங்கு வியாபாரிகள் சங்க தலைவர் சம்சுதீன், செயலாளர் ராஜபோஸ்ரீகன், பொருளாளர் ரெக்சன், அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் முருகையா, துணைத்தலைவர் மாரிலிங்கம், பொருளாளர் விமலேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments