மாணவர்கள் தானியங்கி கல்விக் கணக்கு தொடங்குவதற்கு பள்ளிகளில் முகாம் அமைத்து செயல்படுத்த வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தல் !
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
ஒன்றிய கல்வி அமைச்சகம் யூனியன் பிரதேசத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் “தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவு ஐடியை” (APAAR ID) உருவாக்க அறிவுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரி கல்வித்துறை செயலர் ஜவகர் அவர்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்கு “தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவு ஐடியை” (APAAR ID) உருவாக்க தொடங்கி உள்ளன. இந்த ஐடி மாணவர் தரவுதள மேலாண்மை அமைப்பு (SDMS) மற்றும் தொகுதி ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு அல்லது கல்வி பிளஸ் (UDISE+) மூலம் உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் ஐடிகள் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பள்ளிகளின் பதிவுகளில் பெறப்படுகிறது. அப்படி பெறப்படும் தரவுகள் ஆதார் அட்டையோடு ஒத்துப்போனால் மட்டுமே APAAR ID பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவிலும், ஆதார் பதிவிலும் மாற்றம் இருந்தால் அதற்கு உரிய சான்றிதழ் வாரியச் சான்றிதழ் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமும், புதுச்சேரி உள்ளாட்சித் துறை அதிகாரியும் வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இப்படி ஒன்றிய அரசின் திட்டத்தை மாநில அரசின் அதிகாரிகள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்தாலும், ஆதார் திருத்தம் மற்றும் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுமுறை எடுத்து அழைத்துச் சென்றாலும் ஒரே நாளில் அந்த ஐடியை உருவாக்க முடியாமல் அலைகழிக்கப்படுகிறார்கள். பொது சேவை மையங்களில் தகுந்த ஆதாரம் இல்லாத பட்சத்தில் அந்த ஐடி ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பும் சூழல் றே்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, பள்ளி மாணவர்கள் “தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவு ஐடியை” (APAAR ID) உருவாக்குவதற்கு புதுச்சேரி அரசு ஒருங்கிணைந்த அதிகாரிகள் குழு அமைத்து, அந்த குழுவுடன் பொதுசேவை மையங்கள் இணைந்து அந்தந்த பள்ளிகளில் முகாம் நடத்தி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இத்திட்டம் முழுமைபெறும். மேலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது. பெற்றோர்களுக்கும் சிரமம் ஏற்படாது என்பதை அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக குழு அமைத்து செயல்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
No comments