உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆய்வு..
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பட்டமங்கலம் புதுத்தெரு, அறுபத்திமூவர்பேட்டை, மயிலாடுதுறை ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள பட்டமங்கலம் புதுத்தெரு வாய்க்கால் மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள அறுபத்திமூவர்பேட்டை வாய்க்கால் மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக தூர்வாரப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், மயிலாடுதுறை ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி, நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments