கிருஷ்ணா நகரில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை..
புதுச்சேரியில் எப்போது மழை பெய்தாலும் தாழ்வு பகுதிகளான ரெயின்போ நகர்,கிருஷ்ணா நகர்,பாவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினாலும் மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணா நகர் 12வது தெரு முழுவதும் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் ஒரு வீடு பாதி அளவு மழை நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தது தொடர்ந்து, பெயரளவில் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால் மழை நீரை முறையாக வாய்க்காலில் விடாமல் குடியிருப்பு பகுதிகளில் விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பேசிய போது, நகரின் முக்கிய பகுதியில் இருந்தும் மழைக்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது என்றும், மழை நீரை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
No comments