Breaking News

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் பிரதான சாலையான அண்ணா சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

 


புதுச்சேரி மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகரம், ஊரகப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 

புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகள் உள்ளிட்டவற்றை நகராட்சி அலுவலா்கள் அப்புறப்படுத்தி வருகின்றனா். அதன்படி ஜவாஹா்லால் நேரு வீதி, காமராஜா் சாலை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஏற்கெனவே நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.

குபோ் பஜாா் முன்பிருந்து ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சியினா் அப்புறப்படுத்தினா். மேலும், விளம்பர பலகைகள், பதாகைகள் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டன. சில இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளின் படிகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. 

இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

No comments

Copying is disabled on this page!