Breaking News

மீன்பிடி தொழில் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையினால் மீனவர்களுக்கு வாழ்வாதார நிவாரணம் அரசாணை..

 


புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்திற்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) கடலில் இருந்து குழாய் பாதை அமைத்து பெட்ரோலிய மூலப்பொருட்களை கொண்டு செல்வதற்காக, மீன்பிடி தொழில் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்யும் வகையில் முதற்கட்டமாக 28.01.2022 முதல் 28.04.2023 வரை ஏற்படுத்தப்பட்ட தடைக்கான முதற்கட்ட வாழ்வாதார நிவாரணமாக (1st PHASE LIVELIHOOD COMPENSATION) பதினைந்து (15) மாத காலத்திற்கான ரூ. 90.54 கோடி, பாதிக்கப்பட்ட 5,279 மீனவர்களின் வங்கி கணக்கில் கடந்த மார்ச் மாதம் 2024 அன்று செலுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது இரண்டாம் கட்ட வாழ்வாதார நிவாரணமாக (2nd PHASE LIVELIHOOD COMPENSATION) ஒன்பது (9) மாத காலத்திற்கான தொகை ரூ. 54.74 கோடி, பாதிக்கப்பட்ட 5,289 மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

 மேலும், முதல் கட்ட நிவாரண தொகை வழங்கப்பட்ட போது, விடுபட்ட சுமார் 231 உண்மையான பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மார்ச் 2024 இல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முந்தைய 5,289 பயனாளிகளில் கூடுதலாக மேலும் 231 பயனாளிகளை சேர்க்கும் வகையில் அரசாணை பெறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை முதலமைச்சர் ந. ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (08.11.2024) வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி..

"எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC), ஏனாம் பகுதியில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதி உதவிகளை செய்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு முதலில் ரூ.90.54 கோடி ONGC மூலம் கொடுக்கப்பட்டது‌. தற்போது இரண்டாவது தவணையாக ரூபாய் 54.74 கோடி கொடுக்கப்பட உள்ளது. இதுதவிர, விடுபட்டவர்களுக்கு சுமார் ரூ. 6 கோடி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அதற்கான அரசாணை கொடுக்கப்பட்டிருக்கிறது. 

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமானது, ஏனாம் வழியாக பைப் லைன் போடும்போது மீன் பிடிக்கின்ற நிலை மாறுகின்றது என்ற எண்ணத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்களின் வாழ்விற்காக இந்த நிதியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் கொடுப்பது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒன்று. 

இதற்காக புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி  மல்லாடி கிருஷ்ணராவ்  எடுத்து வரும் முயற்சி என்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஏனாம் தொகுதியில் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் இரவு பகலாக நேரத்தை செலவிட்டு தீவிர முயற்சி செய்து அதற்கான ஆணையை பெறுவது என்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.

விரைவிலேயே இந்த ரூ. 54 கோடி மற்றும் ரூ. 6 கோடி நிதி, ஏனாம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று கூறினார்‌. இச்சந்திப்பின் போது புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் உடனிருந்தார்.

No comments

Copying is disabled on this page!