மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து தேங்காய்திட்டு துறைமுகப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
நேற்று இரவு லேசான மழை பெய்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக கடற்கரை சாலை, விமான நிலையம், உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, உள்ளிட்ட நகர பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கிராமப்புறங்களான பாகூர்,திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் புதுச்சேரியில் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்களின் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீன்வளத்துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறை முழு நேரமும் இயங்கி வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments