புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையப் பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என பொலிவுறு நகா்த் திட்ட நிறுவனம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,பொலிவுறு நகரத் திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு 50 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய பணிகள், தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.பேருந்து நிலையத்தில் முன்பு 17 கடைகள், ஒரு உணவகம், 2 போக்குவரத்து அலுவலகம், 2 பயணசீட்டு பதிவகம், ஒரு நேரக் காப்பகம், 32 பேருந்துகள் நிறுத்துமிடம் மட்டுமே இருந்தன.தற்போது 31 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பகம், 4 போக்குவரத்து அலுவலகம், 3 பயணசீட்டு பதிவகம், 6 ஆம்னி பேருந்து அலுவலகம், பயணிகள் இரவு தங்கும் அறைகள் - 2, விசாரணை அலுவலகம், தகவல் மையம், முதலுதவி அறை , கட்டுப்பாட்டு அறை, நிா்வாக அலுவலகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவற்றுடன் 46 பேருந்துகள் நிற்கும் வசதிகள் உள்ளன.
அத்துடன் 450 பைக்குகள், 25 நான்கு சக்கர வாகனம், 18 ஆட்டோ மற்றும் 10 டாக்ஸி நிறுத்தும் வசதியும் உள்ளது.தற்போது பேருந்து நிலையத்தின் முனைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பேருந்துகள் இயங்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதரப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments