உப்பானாறு வாய்க்காலில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அடுத்த தீபாவளிக்குள்ளாவது கட்டப்படுமா..?
புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மறைமலையடிகள் சாலை காமராஜர் சாலையை இணைக்கும் வகையில் உப்பானறு வாய்க்கால் மீது 732 மீட்டர் நீளத்திற்கு இரு பக்கமும் நடைபாதையுடன் கூடிய பாலம் அமைக்க 2008ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது.
முதலில் மேம்பாலம் கட்ட பணியை எடுத்த நிறுவனம் ரூ. 3.5 கோடிக்கு பைல் பவுண்டேஷன் அமைத்ததுடன் பணியை நிறுத்தியது. மீண்டும் பாலம் கட்ட கடந்த 2014ம் ஆண்டு ஹட்கோ வங்கியில் ரூ. 37 கோடி கடனும், மாநில அரசு ரூ. 7.15 கோடி சேர்த்து மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
என்.ஆர்.காங்., ஆட்சியில் துவங்கிய பாலம், 2016 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு இடையூறுகளை சந்தித்தது. பாலம் வேலை நடப்பதால், உப்பனாறு வாய்க்கால் வழியாக உருளையன்பேட்டை தொகுதிக்குள் மழைநீர் புகுவதாக கூறி பாலம் பணியை நிறுத்தினர். 2 ஆண்டிற்கு மேல் பணி நடந்ததால், கட்டுமான நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 2020ம் ஆண்டு பணி நிறுத்தி, கூடுதல் செலவினத்தை வழங்க கட்டுமான நிறுவனம் ஆர்பிடேஷன் சென்றது. அங்கு, கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 15 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மறைமலையடிகள் சாலை, காமராஜர் சாலையுடன் பாலம் இணைக்க ரூ. 35 கோடியில் மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது.டெண்டரை எடுக்க யாரும் முன் வராததால், 2வது முறையாக விடப்பட்டுள்ளது. அடுத்த தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக உப்பனாறு பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் ஏளனமாக பேசி வருகின்றனர்.
No comments