காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற கொலை குற்றவாளி! ரயில்வே தண்டவாளத்தில் விழுந்ததில் கை, கால் முறிவு!.
சிவகங்கையில் தீபாவளி தினத்தில் வாணியங்குடி பகுதியில் மணிகண்டன் என்ற இளைஞரையும், அன்று இரவு மாத்தூரில் லட்சுமி என்ற மூதாட்டியையும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் இந்த இரு கொலை வழக்குகளிலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்து சிவகங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கீழக்குளத்தைச் சேர்ந்த தவம் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞர் தீபாவளி தினத்தன்று மாலை தனது வீட்டு அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து திடீரென தாக்குதல் நடத்தி மணிகண்டன் உட்பட மூவரை வெட்டியதில் மணிகண்டன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் (அருண்குமார் ஆதிராஜன் இருவர்) காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே தினத்தில் சிவகங்கை அருகே உள்ள களத்தூர் என்ற கிராமத்தில் தனியாக வசித்து வந்த லட்சுமி என்ற மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டு வாசலில் கிடந்தார். காவல்துறை இந்த இரு கொலை சம்பவங்களின் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மணிகண்டன் கொலை வழக்கில் ஏற்கனவே கீழக்குளத்தை சேர்ந்த விக்னேஷ், திருமூர்த்தி, மாசாணம், முத்துக்குமார், சிவகங்கை கணேசன், கோவனூரை சேர்ந்த ரஞ்சித் மதுரை செக்கானூரணி கார்த்திக் ஆகிய 7 நபர்களை காவல்துறை கைது செய்து இருந்தது.
இந்த இரு கொலை சம்பவங்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கீழகுளம் கிராமத்தை சேர்ந்த தவம் - ஐ தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இவர் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக தனிப்படை போலீசார் குற்றவாளி தவம் என்பவனை சிவகங்கை ரயில்வே நிலையம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற தவம் ரயில்வே தண்டவாளத்தில் ஓடி விழுந்ததில் இரு கைகளும் ஒரு காலிலும் முறிவு ஏற்பட்டது.
கை கால் முறிவு ஏற்பட்ட தவம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் சேர்த்து முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தவம் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இரண்டு கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் சில தினங்களுக்கு முன்பு தான் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி வெளியே வந்துள்ளான் என்பது குறிப்பிடதக்கது. கொலைக்கான காரணம் பணம் பிரித்து கொடுக்கும் விவகாரம் தான் என கூறப்படுகிறது.
No comments