Breaking News

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட முதல்வர் ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார்: மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..


மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, அனைத்து வகையிலும் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருந்திடவேண்டும் என்ற முறையில்தான் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என தூத்துக்குடியில் நடந்த உலக மீனவர் தினவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உலக மீனவர் தினவிழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். மீன்வளம், மீனவர் நலத்துறை மண்டல இணை இயக்குநர் சந்திரா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் பேசுகையில்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. மீனவர்கள் கடந்த ஆண்டு தங்களுக்கென தனியாக வங்கி அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தூத்துக்குடியில் மீனவர்களுக்கென தனியாக வங்கி தொடங்கப்பட்டது. 
அதேபோல் மீன்பிடிதடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டு இந்த ஆண்டில் இருந்து அனைவருக்கும் நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி மீனவ மக்கள் நீண்டகாலமாக பட்டா இல்லாமல், தங்களுடைய குடியிருப்பு நிலத்திற்கு உரிமை இல்லாமல் இருந்து வந்தார்கள். தற்போது அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலருக்கு விடுபட்டுள்ளது. விடுபட்டுள்ளவர்களுக்கும் விரைவில் பட்டா வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இந்த பட்டாக்கள் அனைத்தும் முதலமைச்சரால் தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
முதன்முதலில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மீனவரை அறிவித்ததன் மூலமாகத்தான் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் படிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைக்கிறது. கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலினும் பல நல்ல திட்டங்களை மீனவர்களுக்கு செய்து வருகிறார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரேஸ்புரம் கடற்கரை முழுமையாக சீரமைக்கப்பட்டு அங்குள்ள பாலங்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையில் ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறைமுகத்தினை இன்னும் நவீன மயமாக, தரமானதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட, அனைத்து வகையிலும் அரசு உங்களுக்கு உறுதுணையாக இருந்திடவேண்டும் என்ற முறையில்தான் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்றார்.
விழாவில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜாண், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில மீனவரணி நலவாரிய உறுப்பினர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவஅணி தலைவர் அருண்குமார், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, மீனவரணி அமைப்பாளர் டேனியல், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், கவுன்சிலர்கள் ரெக்ஸின், ஜெயசீலி, நாகேஸ்வரி, எடின்டா, பவாணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் டென்சிங், கருப்பசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் எமல்டன் உள்பட பலர் பங்கேற்றனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் நன்றி கூறினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஏலம் எடுப்போர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்ற பேசுகையில்: இயற்கையுடன் போராடி, கடலில் தொழிலை செய்பவர்கள் மீனவர்கள். உயிரை பணயம் வைத்து கடலில் கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு தொழில் செய்கிறீர்கள். உழைக்கும் வர்க்கமாகிய உங்களிடம் எப்போதும் நேர்மை இருக்கும். ஆனால், இன்றைய இளைஞர்கள் பலர் இதுபோன்ற மீடுக்கான தோற்றத்தோடு நேர்கொண்ட பார்வையோடு இல்லாத நிலை இருக்கிறது. அந்த நிலையும் மாறி உங்களைபோன்று உடலும், மனமும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும். பல சங்கங்களாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் தங்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து, அதை நிறைவேற்றுகிறது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதை நீங்கள் நிரூபித்து வருகின்றீர்கள். உலக மீனவர் தினத்தையொட்டி எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற விசைப்படகு தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில், விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் ஜவஹர், துணைத்தலைவர் ராஜா, செயலாளர் பிரகாசம், துணைச் செயலாளர் தர்மபிச்சை, பொருளாளர் கிஷோர், திபுர் சியாஸ், துணை பொருளாளர் செல்வம், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேவியர் வாஸ், ஜார்ஜ், தாமஸ், சாமி, மனோஜ்குமார் உள்பட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!