பேக், செல்போன் ஆகியவற்றை தொலைத்துவிட்டு தவித்த வெளிமாநில நபர்,சைபர் கிரைம் போலீஸார் செய்த உதவி. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் ரஞ்சித்சேத்ரி(32). இவர் கடந்த 7-ம் தேதி உறவினரை தேடி புதுச்சேரி வந்துள்ளார். தனக்கான செலவுகளை ஜிபே மூலமாக செய்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் எடுத்து வந்த பேக் மற்றும் செல்போன் திருடுபோனது. இங்கு தெரிந்த நபர்களோ, உறவினர்களோ யாரும் இல்லாத நிலையிலும், கையிலும் பணம் எதுவும் இல்லாததாலும் செய்வதறியாது ரஞ்சித்சேத்ரி திகைத்துள்ளார்.
பின்னர் கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம் சென்ற ரஞ்சித்சேத்ரி தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார். அவரது நிலையை புரிந்துகொண்ட அங்கு பணியில் இருந்த காவலர்கள் ஜெயக்குமார், கமலி ஆகயோர் ரஞ்சித்சேத்ரிக்கு உன்ன உணவு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவர் சொந்த ஊர் திரும்ப தேவையான பண உதவியும் அளித்துள்ளனர். இதையடுத்து ரஞ்சித்சேத்ரி தனது சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் போலீஸார் செய்த உதவியை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்த ரஞ்சித்சேத்ரி தனது உறவினர்கள் இருவருடன் இன்று புதுச்சேரிக்கு மீண்டும் வந்தார்.
சைபர் கிரைம் காவல் நிலையம் சென்ற அவர் தான் கைப்பட இந்தியில் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து, தனக்கு போலீஸார் உதவிக்காக கொடுத்து அனுப்பிய பணத்தையும் திருப்பி கொடுத்து உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தார்.
அப்போது ரஞ்சித்சேத்ரி கூறும்போது, ''எனக்கு தாய், தந்தையர் இல்லை. போலீஸார் எனக்கு உதவிய சம்பவத்தில் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். அதனால் போலீஸாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்ற காரணத்தினால் என்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்கு வந்தேன். எனது பாராட்டையும், நன்றியையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்'' என்றார்.
No comments