திருப்பத்தூர் கல்லல் எஸ் புதூர் ஒன்றியங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் அமைச்சர் ஆட்சியர் பங்கேற்ப்பு.
மேலபட்டமங்கலம் ஊராட்சி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட மேல பட்டமங்கலத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்களிடம் கோரிக்கையில் குறித்து கேட்டறிந்து அது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில் நாம் அனைவரும் இந்த கிராம சபை கூட்டத்தில் கிராமங்களின் வளர்ச்சிகளை முன்னெடுப்பதற்காக ஒன்று கூடி உள்ளோம்.ஆரம்ப காலகட்டத்தில் ஆண்டுக்கு நான்கு முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை உள்ளாட்சி கட்டமைப்பை மேம்படுத்த அதை ஆறு முறையாக முதலமைச்சர் மாற்றி கிராம ஊராட்சிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக ஒரு நாடு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்க வேண்டும் அப்படிப்பட்ட வளர்ச்சி கிராமங்களில் உள்ள ஒவ்வொரு தனி நபரிடமிருந்தும் அது தொடங்கப்பட வேண்டும். அப்படி கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அமைப்புகள் மூலம் பல்வேறு கடன் உதவிகளை கிராமங்களுக்கு அரசு வழங்கி வருகிறது. அதனை முறையாக திரும்ப செலுத்தி நம் வளர்ச்சிக்கான பாதையை நாம் அதில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் கிராம சுகாதாரம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். எனவே அரசின் வழிகாட்டுதலின் பேரில் கிராமத்தில் சுகாதார கட்டமைப்புகளை முறையாக பராமரித்து நாம் அனைவரும் வளமோடு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஆட்சியர் முன்னிலையில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
மகிபாலன்பட்டி ஊராட்சி
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னதாக துணை முதல்வராக பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சங்ககாலப் புலவர்களில் ஒருவராக இப்பகுதியில் வாழ்ந்த கணியன் பூங்குன்றனாரின் பெயரையே இக்கிராமத்திற்கு "பூங்குன்றம்" என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும், நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அவருக்கான மணிமண்டபம், நூலகம் இப்பகுதியில் அமைத்திட வேண்டும் என்றும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
கொன்னத்தான்பட்டி ஊராட்சி
கொன்னத்தான் பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னதாக துணை முதல்வராக பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் ஊரின் நடுவே அமைந்துள்ள குடிநீர் கிணற்றினை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு திரும்ப கொண்டு வர வேண்டும், நெற்குப்பையில் இருந்து வேலங்குடி வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு கொன்னத்தான்பட்டி வழியாக செல்லும் சாலையை 5,1/2 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலையாக மாற்றி தர வேண்டும், பாப்பான்பட்டி, கொன்னத்தான் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மயான கரைக்கு செல்லும் பாதையில் சாலை அமைத்திட வேண்டும் மற்றும் அவ்விரு பகுதிகளில் நீர் தொட்டிகள் ஏற்படுத்த வேண்டும், அறுவடை காலங்களில் நெல் அடிக்கும் களத்தின் பகுதிகளை சுற்றி பேவர் பிளாக் சாலை அமைத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
வாராப்பூர் ஊராட்சி
சிங்கம்புணரி வட்டம் எஸ் புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சியில் வாராப்பூர் கிராமத்தில் கிராம சபை ஊராட்சி மன்ற தலைவர் ஐ. மலர்விழிநாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கிராம கூட்டத்தில் வாராப்பூரில் துணை சுகாதார நிலையம், மயான ரோடு ,குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், எலக்ட்ரிக் சுடுகாடு, குரும்பலூர் கிராமத்திற்கு துணை சுகாதார நிலையம், பள்ளி கட்டடம், நூலகம், பேவர் பிளாக் ரோடு ,சடையம்பட்டி கிராமத்திற்கு சமுதாயக்கூடம் ,பள்ளி கட்டடம், வணிக வளாகம் ,பயனியர் நிழற்குடை ,பேவர் பிளாக் ரோடு, கட்டையன்பட்டி கிராமத்திற்கு ஊர்காவலன் கோவில் ரோடு, சொக்கநாதர் கோவில் ரோடு, AD காலனி பகுதிக்கு மயான ரோடு, பாலம், மழை நீர் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்கால், போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி, ஊரக முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கல்லல் ஒன்றிய சேர்மன் சொர்ணம் அசோகன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், மண்டல துணை வட்டாட்சியர் மாரியப்பன்,கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்களான மகாலிங்கம்,ராஜசேகர், மேல பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்,சீனிவாசன், உதவி பொறியாளர் ஆனந்தராஜ், திருப்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மற்றும் அனைத்து துறை சேர்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி துணைத் தலைவர்கள், செயலர்கள்,வார்டு உறுப்பினர்கள் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் மகளிர் சுயநிதி குழுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments