Breaking News

திருச்செந்தூரில் 68.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி முடி காணிக்கை மண்டபம் உள்பட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை இருந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்ட வளாகப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

திருச்செந்தூரில் தொடங்கிய இந்த பெருந்திட்ட வளாகப் பணிகள் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூபாய் 200 கோடி நன்கொடையாகவும் திருக்கோயில் நிதி 100 கோடி என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கியது. இந்த பெருந்திட்ட வளாக பணிகளில் கோவிலை சுற்றி இருந்த மண்டபங்கள் பக்தர்கள் தங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடான வளாகங்களும் புதிதாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

இதற்கிடையில் கடந்த 9 ஆம் தேதி திருச்செந்தூரில் நடந்து வரும் பெருந்திட்ட வளாகப்பணிகளில் நிறைவடைந்த பணிகளை பார்வையிட வருகை தந்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிறைவடைந்த பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நடந்து வரும் பெருந்திட்ட வளாகப்பணிகளின் ஒரு பகுதியாக 68.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தொடக்கவிழா நிகழ்ச்சி திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கோவில் தக்கார் அருள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு புதிதாக திறக்கப்பட்ட வளாகங்களை பார்வையிட்டனர்.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001 

No comments

Copying is disabled on this page!