சீர்காழி அடுத்த வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் சுற்றுலாத்தளம் மேம்பாட்டுப் பணிகள்- ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் கடற்கரையில் 1973 ஆம் ஆண்டு சுற்றுலா வளாகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். இங்கு சிலப்பதிகார கலைக்கூடம், பாவை மன்றம், நெடுங்கள் மன்றம், இலஞ்சி மன்றம், கொற்றவை பந்தல், கலங்கரை விளக்கம், தொல்லியல் துறை சார்ந்த அருங்காட்சியங்கள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்ததுடன், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டு இருந்த விடுதிகள் முழுவதுமாக சேதமடைந்தன. இதனை அடுத்து சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டுமென்ற தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சி காலத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்தது. தொடர்ந்து தற்போதுள்ள தமிழக அரசு பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 23 கோடி 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று பூம்புகார் சுற்றுலா வளாக மேம்பாட்டு பணிகளை சுற்றுலா துறை ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். பணிகளை முழுமையாக பார்வையிட்ட அவர் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் மழைக்காலம் வருவதற்கு முன்பாக மேம்பாட்டுப் பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டுமெனஅறிவுறுத்தினார். ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.
No comments