ஹைடிசைன் கம்பெனி தொழிலாளர்கள் போனஸ் பிரச்சனை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சுவார்த்தை ..
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு வருவாய் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஹைடிசைன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. பெரும்பாளும் பெண் தொழிலாளர்களை கொண்டு இயங்கும் இத்தொழிற்சாலையில் தோல் பொருட்களை கொண்டு உயர்ரக பொருட்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் தமது நிறுவன பொருட்களை சந்தைப்படுத்தி அதிக லாபம் ஈட்டும் கம்பெனியாகவும் ஹைடிசைன் உள்ளது.
இப்படி உலக புகழ்பெற்ற ஒரு நிறுவனம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தையும், பணி பாதுகாப்பையும் வழங்க மறுப்பதுடன், கடந்த 20 ஆண்டுகளாக கொடுத்து வந்த 19.25 சதவீத தீபாவளி போனஸ் தொகையை வழங்க மறுக்கிறது. கொரோனோ காலத்தில் 8.33 சதவீதமாக குறைத்து, கொடுத்த போனஸ் தொகையையே தற்போது நல்ல முறையில் லாபத்தில் இயங்கும்போதும் அதே அளவு போனஸ் மட்டுமே கடந்த ஆண்டு அளித்து தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தது. பின்னர் இதுகுறித்து அங்குள்ள தொமுச சங்கத்தினர் முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரி என பலகட்ட பேச்வார்த்தை நடத்தியும் நிர்வாகம் தரப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொழிலாளர் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் தொகை வேண்டி தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை ஆணையரை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி போனஸ் தொகையைாக கடந்த ஆண்டு கொடுத்த 8.33 சதவீத போனஸ் தொகையை தொழிலாளர்கள் வங்கி கணக்கில் நிர்வாகம் நேற்று முன்தினம் செலுத்தி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 19.25 சதவீத போனஸ் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இதுகுறித்த விழிப்புணர்வை தகவல் அறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தொழிற்சாலைக்கு நேரிடையாக சென்று தொழிலாளர்கள் முன்னிலையில் நிர்வாக இயக்குநர் இலானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 19.25 சதவீத தீபாவளி போனஸ் தொகை வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிர்வாகம் தரப்பில் ஆலோசித்து 28–ஆம் தேதி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்தது. இதனால் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு பணியை தொடங்கினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, தொழிற்சாலை அதிகாரி ராஜ்குமார், தொமுச தலைவர் அங்காளன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் செல்வநாதன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், திலகர், மந்திரிகுமார், சங்க நிர்வாகிகள் அமுதா, லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments