Breaking News

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் விதமாக ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் நேரில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏரல் பகுதிகளில் மழை வெள்ளம் அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏரல் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் மத்திய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

தேசிய மீட்புக் குழு கமாண்டர் ராகுல் மார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஏரல் வட்டாட்சியர் கோபால் தலைமையில் வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்ட போது முதலில் ஏரல் தாலுகா அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

பின்னர், மழை வெள்ளத்தால் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை பார்வையிட்டனர். பாலம் சீரமைப்பு பணிகள் முடிவடையாத நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட சிவராம மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001 

No comments

Copying is disabled on this page!