குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் அன்று கடற்கரை பகுதியில் இரு தரப்பினர்கள் கம்புகளுடன் கடுமையாக மோதிக்கொண்ட வீடியோ. சமூக வலைதளங்களில் வைரல்.
இந்த தசரா திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற 12 ஆம் தேதி நள்ளிரவு கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்ற தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மாலை அணிந்த பக்தர்களும் தனித்தனியாக கடற்கரையில் நீராடி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது இரண்டு குழுவினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே இரு குழுவினர்களும் கையில் கிடைத்த கம்புகளால் ஒருவரை ஒருவர் மாற்றி தாக்கி கொண்டனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரு குழுவினர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே காவல்துறையினர் சார்பில் தசரா திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் ஜாதி கொடி கொண்டு வரக்கூடாது, சாதி படங்கள் அணிந்த ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று அறிவித்துள்ளனர். ஆனால் அதை பொருட்டாக நினைக்காக பக்தர்கள் விழாவிற்கு ஜாதிக்கொடியுடன் வருகை தந்துள்ளனர். மேலும் சாதி படங்கள் கொண்ட டி சர்ட்டுகள் அணிந்துள்ளனர்.
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரத்தன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சாதி கொடிகள் மற்றும் படங்கள் கொண்ட டீ சர்ட்டுகள் அணிந்து வர கடுமையான தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கேட்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களிடம் கேட்டபோது, ஒரு தரப்பினர் சாதி டீ ஷர்ட் அணிந்து வந்துள்ளனர். கடற்கரையில் சண்டை போட்ட மற்றொரு தரப்பினர் யார் என்று தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில் காலில் ஒருவரை ஒருவர் மிதித்ததால் தான் இந்த தகராறு ஏற்பட்டதாக கூறிய அவர், சாதி கொடிகள் மற்றும் டீ சர்ட் அணிந்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments