Breaking News

திருக்கடையூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை.


மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு  114 பயனாளிகளுக்கு ரூ.89  இலட்சத்து  46 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசிய போது: மக்கள் தொடர்பு முகாமானது மக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே நடத்தப்படுகிறது. ஒரு கிராமத்திற்கு சென்று, அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படும். அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அரசின் பல்வேறு திட்டங்கள் பல்வேறு துறைகளின் திட்டங்கள் என்னென்ன இருக்கின்றது, அது எவ்வாறு செயல்படுகின்றது, அதை எப்படி பெறுவது, இதை அனைத்தையும் காட்சிப்படுத்தும் விதமாகவும் வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, தோடடக்கலைத்துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் திட்ட விளக்க அரங்குகளும் அமைத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுடன் முதல்வரில் நிறைய மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாதம் ஒருமுறை அனைத்து அலுவலர்களும் ஒரு தாலுக்காவிற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நிறை, குறைகளை கேட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. நீங்கள் நலமா என்ற திட்டம் மூலமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. 

நமது மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் நிறைய மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாமானது மாதம் ஒரு முறை ஒரு தாலுக்காவில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, முடிந்தளவிற்கு மக்கள் பிரதிநிதி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி தமிழ்நாடு அரசே முன்வந்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காணும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இன்றைய தினம், இம்முகாமில் 114 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில்  ரூ.89 இலட்சத்து 46 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத்தலைவர் .நந்தினி ஸ்ரீதர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கீதா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ர.துளசிரேகா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் து.லெனின்தாஸ், கே.சுமதி, திருக்கடையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயமாலதி சிவராஜ், காழியப்பநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி, பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.தீபா, மாணிக்கபங்கு ஊராட்சிமன்றத்தலை எஸ்.மோகன் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஸ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!