நீட்தேர்வு எழுதி 497 மதிப்பெண்கள் பெற்று வெற்றி. 7.5 சதவீதம் அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவி, அரசுக்கு நன்றி.
நீட்தேர்வு எழுதி 497 மதிப்பெண்கள் பெற்று வெற்றி. 7.5 சதவீதம் அரசு உள்ஒதுக்கீடு மூலம் நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவியாக படிக்கும் வாய்ப்பை பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவி மற்றும் குடும்பத்தார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சந்திரசேகர்-விஜயா தம்பதியினர். சிறு குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்திரோதயா என்ற மகளும் அன்பரசன் என்ற மகனும் உள்ளனர்.
மகன் அன்பரசன் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் மகள் சந்திரோதயா மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவை நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த மாணவி ஆக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
அதேபோல் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 538 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு வீட்டில் வளரும் ஆடுகளையும் பார்த்துகொண்டு நன்றாக படித்து வந்த மாணவி சந்திரோதயா தன் மருத்துவக் கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் 107 மதிப்பெண்கள் பெற்று அதிர்ச்சியளித்தார்.
பெற்றோர்கள் கூலி வேலை செய்வதால் கோச்சிங் சென்டர் செல்வதற்கு வசதி இல்லாத நிலையில் இரண்டாவது முறையும் நீட் தேர்வு எழுதியதில் 254 மதிப்பெண்கள் பெற்றார். மற்றவர்கள் ஏளனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவி பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தால் விடா முயற்சியாக படித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 497 மதிப்பெண்கள் எடுத்து 7.5 சதவீதம் அரசு உள்ஒதுக்கீட்டில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பெற்றோருக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
விடாமுயற்சி தன்னம்பிக்கையால் படித்து வெற்றி அடைந்திருப்பதாகவும் தன்னைப்போல் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு இட ஒதுக்கீட்டை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மாணவி சந்திரோதயா இருதய நோய் நிபுணராகி ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் இதற்கு வழிவகை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாணவி நன்றி தெரிவித்தார்.
மகளின் கனவு நிறைவேறுவதற்காக அவர் இரவில் படிக்கும் போது தாங்களும் விழித்து கொண்டு காத்திருந்ததாகவும் விடா முயற்சியாலும் அரசின் உதவியாலும் தன்மகள் தற்போது மருத்துவபடிப்பு படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதால் தமிழக அரசுக்கு பெற்றோர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
விடாமுயற்சியுடன் படித்து வெற்றிபெற்று மருத்துவ படிப்பு படிக்கபோகும் மாணவிக்கு பொதுமக்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சிறப்பு செய்திக்காக மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
No comments