Breaking News

கொரோனா காலத்தில் மூடப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோவில் சண்முகவிலாஸ் மண்டபத்தை மீண்டும் திறக்க வேண்டும்!

 


மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள சண்முகவிலாசம் மண்டபத்தை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தென்பகுதியில் சண்முகவிலாசம் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயபெருமக்கள் தங்களது வயலில் முதன்முதலாக உற்பத்திசெய்த நெல், தானியங்கள், பருத்தி, மா போன்ற காய்கறி பழவகைகளை இந்த சண்முக விலாசம் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதேபோன்று திருவிழா போன்ற கூட்டநெரிசல் அதிகமாக உள்ள காலங்களில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் மற்றும் உள்ளுரைச் சார்ந்த பக்தர்கள், வியாபாரிகள், பணிநிமித்தமாக நீண்ட தொலைவிற்கு செல்வோர்கள் தினம்தோறும் இந்த மண்டபத்தில் இருந்து சண்முகரை வழிபட்டு செல்வதும் பல ஆண்டுகாலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். 

இந்நிலையில் கடந்த கொரோனா நோய்தொற்றின் போது அடைத்துவைக்கப்பட்ட சண்முகவிலாசம் மண்டபம் வழக்கத்திற்கு மாறாக இதுவரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமலே உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சண்முக விலாசம் மண்டபம் அலுவலக தேவை மற்றும் விஐபிகளின் வசதிகளுக்காக மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருச்செந்தூர் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை முருகப்பெருமானுக்கு நேரடியாக சண்முகவிலாச மண்டபத்தினில் படையலிட்டு வழிபாடு நடத்த முடியாமல் உள்ளது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் சண்முகவிலாசம் மண்டபத்தில் பக்தர்கள் தாம் விளைவித்த நெல்முதலிய தானிய வகைகளை இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்தவும், அதேபோல் கோவிலுக்குள் சென்று இறைவனை வழிபாடு செய்ய முடியாதவர்கள் இந்த மண்டபத்தில் இருந்தவாறே வழக்கம்போல் இறைவனை தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். 


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!