அமலிநகரில் மீனவர்கள் விருப்பப்படி தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டும்: எஸ்.பி.சண்முகநாதன் ஆட்சியரிடம் மனு..
அமலிநகர் மீனவர்களுக்கு ஆதரவாக தூண்டில் வளைவு கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் மீனவ கிராம மக்கள் தூண்டில் வளைவு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீனவர்கள் கேட்ட தூண்டில் வளைவிற்கு பதிலாக தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்தும் தங்கள் கோரிக்கையின்படி தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தியும் கடந்த 25 நாட்களாக அமலிநகர் மக்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் பொதுமக்களின் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் சென்று ஆதரவளித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து அமலிநகர் மீனவ மக்களின் கோரிக்கையின்படி அமலிநகர் கடற்கரை வடக்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது, அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், சாம்ராஜ் உள்ளிட்டேர் உடனிருந்தனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments