Breaking News

தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ நகரில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு ..

 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சீர்காழியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வாளர் (தேசிய பேரிடர் மீட்பு படை, அரக்கோணம்) தீபக்குமார், தலைமையில் உள்ள 30 மீட்பு படை வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து அவர்களிடம் உள்ள மீட்பு கருவிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், அவர்களின் தேவைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்கட்பட்ட என்.ஜி.ஓ நகர் மற்றும் வி.என்.எஸ் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீரினை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 362 தற்காலிக நிவாரண மையங்கள், 146 திருமண மண்டபங்கள், 68 சமுதாய கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே, மீனவர்களுக்கு மழை தொடர்பான எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டு அவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 4500-க்கும் மேற்பட்ட முதல் நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 24 மணிநேரமும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாவட்ட கட்டு;ப்பாட்டு மையத்தில் இயங்கும் தொலைபேசி எண்:04364-222588 மற்றும் 1077 என்ற எண்ணை அழைத்து, மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments

Copying is disabled on this page!