திருவிளையாட்டம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நூதனபோராட்டம்;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் ஊராட்சியில் குண்டும் குழியுமாக கேட்பாரற்று கிடக்கும் கோயில் பத்து, காளியம்மன் கோவில் தெரு, ஆலக்கரை ஆகிய பகுதிகளை இணைக்கக்கூடிய சாலையை உடனடியாக சீரமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் அறிவரசன் தலைமையில் நடைபெற்ற நூதன போராட்டத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் காளியம்மான் கோவில் தெருவில் இருந்து டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க சாலை விபத்தில் கையில், தலையில் அடிப்பட்டது போல கட்டுபோட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிளையாட்டம் கடைவீதியில் வர்த்தகர்கள், பேருந்து பயணிகள், பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த பொதுக்கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்திட வேண்டும், பொது மயானத்திற்காக அரசு வழங்கியுள்ள 10 லட்சம் பரிசு தொகையை மக்களுக்கான அடிப்படை வசதிகளை நேர்மையுடன் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.
No comments