வகுப்பு ஆசிரியர் அடித்ததால் எலி பிஸ்கட்டை தின்று தற்கொலை முயற்சி 11ஆம் வகுப்பு அரசுபள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிமாறன் மகன் மனோஜ்(16). இவர் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவன் மனோஜ் பள்ளியின் எதிர்புறம் உள்ள வணிக வளாகம் ஒன்றில் எலி பிஸ்கட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையறிந்த சக மாணவர்கள் பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளனர். உடனடியாக ஆசிரியர்கள் மாணவன் மனோஜை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்த சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். கடந்த ஐந்தாம் தேதி பள்ளிக்கு செல்லாத மாணவன் மறுநாள் ஆறாம் தேதி பள்ளிக்கு சென்றபோது வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டு தன்னை அடித்ததாகவும் இன்றும் பள்ளிக்கு வந்த மாணவனை வகுப்பு ஆசிரியர் அடித்து, தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி வைத்த நிலையில் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வனும் அடித்ததால் எலி பிஸ்கட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் தெரிவித்துள்ளார். மாணவனை பார்க்க வந்த தலைமையாசிரியரை மாணவனின் தாயார் ஆத்திரத்தில் தாக்கினார். அப்போது அங்கு விசாரணை செய்து கொண்டிருந்த போலீசார் தடுத்தனர். மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை தங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் சொல்லவில்லை என்றும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொல்லிதான் தெரியவந்ததாகவும் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் மாணவனிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் இந்தமாதத்தில் ஒரு நாள் மட்டுமே மாணவன் பள்ளிக்கு வந்ததாகவும், கடந்த மாதம் பாதி நாள் பள்ளிக்கு வராததால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வர சொன்ன நிலையில் மாணவன் அழைத்து வராததால் ஆசிரியர் கண்டித்ததாகவும் தெரிவித்தனர்.
No comments