இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருகிறது.
புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் குழந்தைகள் தின விழா லாஸ்பேட்டையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.முத்தியால்பேட்டை குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், வைத்தியநாதன் எம்எல்ஏவின் துணைவியார் ரமா வைத்தியநாதன், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநரும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பொறுப்பு இயக்குநருமான இளங்கோவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய இயக்குநர் இளங்கோவன்,
இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தாய்மார்கள் பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை,திருமண உதவித்தொகை, கலப்பு திருமண உதவித்தொகை, 2 பெண் குழந்தைகள் பிறந்தால் உதவித்தொகை மற்றும் தாய்மார்கள் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை அங்கன்வாடி மூலம் சத்தான உணவு, கண்காணிப்பு என பல்வேறு சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு 5 வயது வரை ஊட்டச்சத்து உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்கள் எந்த நோயின் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமான குழந்தைகளாக வளருவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments