புதுவையில் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்களுக்கு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்குப் பதிலாக வங்கியில் பணம் செலுத்தும் திட்டத்தை முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
புதுவையில் ஆதிதிராவிடா் நலன், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நலிவடைந்த ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தினருக்கு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது நிறைவடைந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சரவணன்குமாா் முன்னிலை வகித்தாா். பயனாளிகளுக்கு காசோலையை வழங்கி திட்டத்தை முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா். இதில் சுயேச்சை எம்எல்ஏ நேரு,துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரியில் 98,647 பேருக்கும், காரைக்காலில் 23,464 பேருக்கும், ஏனாமில் 5,501 பேருக்கும் என மொத்தம் 1.27 லட்சம் பேருக்கு ரூ.12.76 கோடி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments